தண்ணீர் லாரி மோதியதை அடுத்து கத்தார் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
கொல்கத்தாவில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு கத்தார் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான விமானம் தினமும் அதிகாலை 2.30 மணிக்கு இயக்கப்படுவது வழக்கம். இன்று அதிகாலையும் வழக்கம் போல அந்த விமானம் கொல்கத்தாவில் இருந்து புறப்பட தயாராக இருந்தது.
விமானத்தில் 103 பயணிகள் இருந்தனர். புறப்படுவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது விமானநிலையத்துக்குள் வந்த தண்ணீர் லாரி ஒன்று விமானத்தின் வயிறு பகுதியில் மோதியது. இதில் விமானம் சேதமடைந்தது.
இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். விமானம் ஆய்வு செய்யப்பட்டது. சேதமடைந்த பாகத்தை சரி செய்வதற்காக பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். விமானம் சரிசெய்யப்பட்டு நாளை காலை 3 மணிக்குப் புறப்படும் என்று கூறப் பட்டது.
இதனால் பயணிகள் அனைவரும் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் லாரியின் பிரேக் பிடிக்காமல் மோதிவிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.