மத்திய நீர்வள ஆணையத்தின் தகவலின்படி, யமுனை நதியின் நீர்மட்டம் அபாயக் குறியைத் தாண்டி இன்று காலை 7 மணி அளவில் 205.48 ஆகப் பதிவானது. இதுவே ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் 206.02 மீட்டராகப் பதிவாகியது. ஹரியானா மாநிலம் ஹத்னிகுந்த் தடுப்பணையில் இருந்து ஜூலை 11ஆம் தேதி சுமார் 3,60,000 கன அடியாக அதிகரித்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் 53,955 கனஅடியாக குறைந்தது.
இருப்பினும் வெள்ளத்தால் பாதித்த பல பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் சில இடங்களில் நீடிக்கிறது. வெள்ளப் பாதிப்பு முகாம்களில் தக்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேற்று சந்தித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.
டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காக 1,606 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை 17 குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும், 7241 பேர் மற்றும் 956 கால்நடைகள் NDRF குழுக்களால் வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும், மீட்கப்பட்ட 908 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் ஆறு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த தாழ்வான பகுதிகளில் இருந்து சுமார் 26,401 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 21,504 பேர் 44 தற்காலிக நிவாரண முகாம்கள் மற்றும் பள்ளிகள், சமூக மையங்கள் போன்ற கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.