மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்நஸ் சேலஞ்ச் எனப் பல்வேறு சவால்கள் சமூக வலைத்தளத்தில் தோன்றி மறைவது வழக்கம். அந்த வகையில் தற்போது பிரபலமடைந்து ட்ரெண்டாகி வருகிறது பாட்டில் மூடி சேலஞ்ச். கஜகஸ்தானை சேர்ந்த டேக்வாண்டோ தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின், தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க மூடியை மட்டும் தனியாக தெறித்து பறக்கும் வகையில் பேக் கிக் (back kick) முறையில் பாட்டிலை உதைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதனை வேறு யாராவது செய்ய முடியுமா என சவால் விடுக்க, சமூகவலைத்தளங்களில் பாட்டில் மூடி சேலஞ்ச் ட்ரெண்டாகி விட்டது. ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், அமெரிக்க பாப் பாடகர் ஜான் மேயர், ஹாலிவுட் நடிகை ஒயிட்னி கம்மிங்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பாட்டில் மூடி சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். 47 வயதான ரிஜிஜு அற்புதமாக பேக் ஷாட் அடித்து பாட்டில் மூடியை திறந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டரில், “பாட்டில் மூடியை திறப்பது என்பது சர்ஜிக்கல் அறுவை சிகிச்சை போன்றது. அதற்கு, கூர்மையான கவனம், உடல் பேலன்ஸ், வலிமை ஆகிய மூன்றும் சரியாக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒழுங்கத்துடன் இருக்க விரும்பினால், நீங்கள் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். உடல் தகுதி என்பது நீங்கள் எப்படி தோற்றமளிக்கிறீர்கள் என்பது அல்ல. அது ஒழுக்கமாக நடந்துகொள்வதை பற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரின் பாட்டில் மூடி சேலஞ்ச் வீடியோவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
India's superstar sports minister @KirenRijiju does the #BottleCapChallenge successfully. Bollywood/Hollywood watch out