பஞ்சாப் மாநிலத்தில் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியின் போது, அது மக்களை விரட்டி விரட்டி தாக்கியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
பஞ்சாம் மாநிலம் ஜலந்தர் நகரின் லம்பா பிந்த் பகுதியில் வீடு ஒன்றில் சிறுத்தை பதுங்கி இருந்துள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். பின்னர் வனத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், முதலில் வலையை வைத்து சிறுத்தையை பிடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது, சிறுத்தைப் பிடிப்பதை பார்க்க ஏராளமான மக்கள் அங்கு கூடினர். வீதிகளை முடக்கி மக்கள் நடமாட்டத்தை வனத்துறையினர் கட்டுப்படுத்திய போது, அதனையும் மீறி ஏராளமானோர் அங்கு கூடிவிட்டனர்.
வனத்துறையினர் வலையை வைத்துக் கொண்டு காத்திருக்க, சிறுத்தையோ வலையை தாண்டி வெளியேறிவிட்டது. வலையை விட்டு வெளியேறிய வேகத்தில், அதனை பிடித்துக் கொண்டிருந்தவர் மீது பாய்ந்தது.
பின்னர், அங்கிருந்து வீடுகளுக்கு நடுவே பாய்ந்து ஓடியது. சிறுத்தை பிடிப்பதை பார்க்க ஏராளமானவர்கள் கூடியிருந்ததால், அவர்கள் மீது சிறுத்தை பாய்ந்து, பாய்ந்து தாக்கியது. இதனால், மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதனையடுத்து, துப்பாக்கி மூலம் மயக்க ஊசி ஏற்றி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேரங்களுக்கு மேல் இந்த முயற்சி சென்றது. இறுதியில் ஒருவழியாக சிறுத்தை பிடிக்கப்பட்டு, சாஹர்புர் வனவிலங்கு பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுத்தை தாக்கியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தச் சிறுத்தையானது அருகிலுள்ள ஹிமாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள மலைப் பகுதியில் இருந்து ஜலந்தர் நகருக்கு வந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தையானது மக்களை விரட்டி விரட்டி தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.