முசாஃபர் நகர் கலவர வழக்கில் உத்தரப் பிரதேச அமைச்சர் உள்ளிட்ட 4 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
2013-ல் நடந்த முசாஃபர் நகர் கலவர வழக்கில், உத்தரப் பிரதேச அமைச்சர் சுரேஷ் ரானா, முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பல்யான், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான சங்கீத் சோம் மற்றும் உமேஷ் மாலிக் ஆகியோருக்கு பிணையில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை அங்குள்ள நீதிமன்றம் வழங்கியுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹாபஞ்சாயத்தில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் ரானா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு, கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியுள்ளனர். கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதற்காக அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அவர்கள் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதால், 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முசாஃபர்நகரில் கலவரம் நடந்தது. கலவரத்தில் நடந்த வன்முறைகளில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் நகரை விட்டு வெளியேறினர்.
இந்தக் கலவர வழக்கை சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வந்தது. விசாரணைக் குழுவின் கோரிக்கையை ஏற்று உத்தரப் பிரதேச அரசு, கலவரத்திற்கு காரணமானவர்களை இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ-ன் கீழ் வழக்கு தொடர அனுமதி அளித்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த முசாஃபர்நகர் நீதிமன்றத்தின் நீதிபதி மது குப்தா, உபி அமைச்சர் சுரேஷ் ரானா உள்ளிட்ட 4 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தார்.