புனே கட்டட விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த பிமால் ஷர்மா என்பவர் விபத்து குறித்து தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து குடிசைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் அந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த ஒருவர் விபத்து குறித்து தெரிவித்துள்ளார். பிமால் ஷர்மா என்பவர் 15 வருடங்களுக்கு முன்பு பீகாரின் கதிகாரில் இருந்து புனேவுக்கு கட்டட தொழிலுக்காக வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தன் ஊரில் இருந்து தன் சகோதரன் உட்பட சிலரையும் உடன் அழைத்துள்ளார். தற்போது அவர்களே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கட்டட விபத்து குறித்து பேசிய பிமால் ஷர்மா, கட்டடமே இடிந்து விழுவது போல நினைத்தேன். என்னால் எதையுமே பார்க்க முடியவில்லை. பலரின் அலறலை மட்டுமே கேட்டேன். சிலர் அழுதார்கள். சிலர் உதவிக்காக அலறினார்கள். நானும் உதவிகேட்கலாம் என்று யோசித்தேன். ஆனால் எனக்கு குரல் வரவே இல்லை. நான் பத்து முதல் 15 நிமிடங்கள் அமைதியாகவே இருந்தேன். விபத்தில் சிக்கியவர்களை மீட்க பலரும் வந்தனர். அப்போது எப்படியோ சமாளித்து நான் உதவி கோரினேன். என்று தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய பிமாலின் உடல் குப்பைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்டது. விபத்தில் சரிந்த மரம் ஒன்று தான் தன்னை காப்பாற்றியதாகவும், கற்கள் தன் தலையை தாக்காமல் மரமே தடுத்தி நிறுத்தியதாகவும் பிமால் தெரிவித்துள்ளார்