செய்தியாளர்: ரகுமான்
நமது அன்றாட வாழ்வியல் முறையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். அந்த வகையில் ஆண்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புவர். சிலர் ஆணழகன் போட்டிகளுக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுவர். ஆனால், ஆசை மட்டும் போதாது கடின உடற்பயிற்சியும், விடா முயற்சியும் அவசியம் என்கிறார் புதுச்சேரியை சேர்ந்த ஆணழகன் சூரஜ்.
தனது கடினப் பயிற்சிகள் ஆணழகனாக இருப்பதற்கு மட்டுமல்லாமல், தனக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குவதாகவும் இதுவரை எந்தவித நோய்க்காகவும் மருத்துவரை அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆணழகன் போட்டிக்கு செல்பவர்கள் பயிற்சி மட்டுமல்லாமல் விட்டமின் போன்ற பல துணை மருந்துகளையும் உட்கொள்வார்கள். ஆனால், எந்தவித மருந்துகளையும் உட்கொள்ளாமல் முறையான பயிற்சியும்,உணவுகளையும் எடுத்துக் கொண்டால் சாதிக்கலாம் என்பதை கடந்த 12 ஆண்டு காலமாக அளித்தும் வரும் பயிற்சி மூலம் சூரஜ் நிரூபித்துக் காட்டியுள்ளார் என பெருமிதம் கொண்டார் பயிற்சியாளர் முகுந்தன்.
இயற்கையான உடல் அமைப்பைக் கொண்டு முறையான பயிற்சியும், விடா முயற்சியும் தங்களது அன்றாட வாழ்வியல் முறையில் கடைபிடித்தால் எதையும் சாதிக்க முடியும். உடலையும் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள முடியும்.