2000, 200 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதில் சிக்கல் நீடித்து வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வழக்கமாக நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் அழுக்கடைந்து விட்டாலோ அல்லது கிழிந்துவிட்டாலோ வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்வோம். குறிப்பாக மளிகைக் கடை, மார்க்கெட்டுகளில் கடை நடத்துவோர் உள்ளிட்ட சிலருக்கு அடிக்கடி இதுபோன்று நோட்டுகளை மாற்ற வேண்டிய தேவையிருக்கும். கிழிந்த நோட்டுகளை சேர்த்து மொத்தமாக வைத்து வங்கிகளில் சென்று மாற்றிக் கொண்டு வருவார்கள். ஆனால், புதிதாக தற்போது புழகத்தில் இருக்கும் 2000, 200 ரூபாய் நோட்டுகளை அவ்வாறு மாற்ற இயலாத நிலை உள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு உடனடியாக கொண்டு வரப்பட்டது 2000 ரூபாய் நோட்டுகள். அதன் பிறகு 2017 ஆகஸ்ட் மாதம் 200 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டது. தற்போது, இந்த இரண்டு நோட்டுகளும் அதிக அளவில் புழகத்தில் உள்ளன. குறிப்பாக சமீப காலமாக ஏடிஎம்களில் 200 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழகத்தில் உள்ளன. 6.70 லட்சம் கோடி ரூபாய் அளவில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தற்போது அதிகம் புழகத்தில் உள்ள 2000, 200 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாத நிலை உள்ளது. நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான ரிசர்வ் வங்கி விதிகளின் படி ரூ.5, ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000, ரூ.5000 மற்றும் ரூ.10000 நோட்டுகளை மட்டும் தான் கிழிந்தால் அல்லது அழுக்கானால் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், 2000, 200 ரூபாய் நோட்டுகளையும் மாற்றிக் கொள்ளும் வகையில், ரிசர்வ் வங்கி விதியின் பிரிவு 28 இன்னும் திருத்தப்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் நோட்டுகளை மாற்ற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.
இதுதொடர்பாக மத்திய வங்கியானது, நிதித்துறை அமைச்சகத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசு விதிகளை திருத்துவதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை என வாடிக்கையாளர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கின்றனர். விரைவில் தேவையான மாற்றங்களை செய்யப்படும் என நிதி அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.