பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்பு 5 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
பிரதமர் மோடியை தொடர்பு கொள்ளும் பொருட்டு கடந்த 2015-ஆம் ஆண்டு ‘நமோ ஆப்’ உருவாக்கப்பட்டது. இதில் பிரதமரின் உரையாடல்கள் மற்றும் தகவல்கள்இடம்பெற்றிருக்கும். அத்துடன் பிரதமரை இ-மெயில் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக தொடர்பு கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘நமோ ஆப்’பில் புதிதாக ஒரு சிறப்பம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது நமோ ஆப் மூலம் யார் வேண்டுமானலும் பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடை அளிக்கலாம். இதற்கான சிறப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. 5 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை எவ்வளவு விருப்பமோ அவ்வளவு தொகையை செலுத்தலாம். அப்படி நாம், பாரதிய ஜனதா கட்சிக்கு நமோ ஆப் வழியாக நன்கொடை அளிக்கும்போது நமக்கு ஒரு பரிந்துரை குறியீடு வரும். அந்த பரிந்துரை குறியீட்டை நமக்கு தெரிந்துவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களையும் நாம் பாஜகவிற்கு நன்கொடை அளிக்க ஊக்குவிக்கலாம்.
நமக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை குறியீட்டை பயன்படுத்தி, இன்னும் 100 பேர் பாஜக கட்சிக்கு நமோ ஆப் வழியாக நன்கொடை அளித்தால் நமக்கு பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பாஜகவை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சாதாரண மக்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இதன் மூலம் ஒரு தொடர்பு அதிகரிக்கும் என கூறினார்.
ஒருவேளை நமக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை குறியீட்டை பயன்படுத்தி 100 பேர் இல்லாமல் வெறும் 10 பேர் பாஜகவிற்கு நமோ ஆப் வழியாக நன்கொடை அளித்தால் நமக்கு டி சர்ட் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் கிடைக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக வெற்றி பெறும் பொருட்டு பல்வேறு வகையான நடவடிக்கைளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.