பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 2,3-வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஆளும் ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய மகா கட்பந்தன் அணி, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, அசாதுதின் ஓவைசி தலைமையிலான கூட்டணி என நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.
இன்று வாக்குப் பதிவு நடைபெறும் சுமார் 71 தொகுதிகளில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ 35 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 29, ஆர்ஜேடி 42, காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியானது மொத்தம் 41 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. காமன்வெல்த் விளையாட்டு தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் ஸ்ரேயாசி சிங் பாஜக வேட்பாளராக அறிமுகமாகிறார்.
கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் தேர்தல் நடப்பதால் தேர்தல் ஆணையத்தால் பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டு அதன்படி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்களிக்க உள்ள 2.14 கோடி பேரில், 1.01 கோடி பெண்கள் அடங்குவர்.