கேரளாவில் முதல் கட்டமாக ஐந்து மாவட்டங்களுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துவருகிறது.
திருவனந்தபுரம், கொல்லம், பதானம்திட்டா, ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய ஐந்து தெற்கு மாவட்டங்களில் நடைபெறும் முதல்கட்ட கேரள உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் 318 கிராம பஞ்சாயத்துகள், 50 தொகுதி பஞ்சாயத்துகள், ஐந்து மாவட்ட பஞ்சாயத்துகள், 20 நகராட்சிகள் மற்றும் இரண்டு மாநகராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
பூத்களுக்கு நடந்துவந்து வாக்களிக்க முடிந்த கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குப்பதிவு முடிவடையும் போது இன்று மாலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட சாவடிகளில் வாக்களிக்கலாம், அவர்கள் பிபிஇ கிட் அணிந்திருக்க வேண்டும். மற்ற அனைத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்பு வாக்கெடுப்புகள் கோவிட் -19 விதிமுறைகளின் கீழ் நடத்தப்படுகின்றன, வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து வெளியேறும்போது தங்கள் கைகளைத் தூய்மைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமூக இடைவெளியை பராமரிக்கவும், முகக்கவசங்கள் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. காலை 9.15 வரை திருவனந்தபுரத்தில் 11.85 சதவீத வாக்குகளும், காலை 10 மணியளவில் ஆழப்புழாவில் 17 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.