தேங்காய் சின்னத்துக்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரை சின்னத்தில் விளக்கு எரிந்தது உண்மைதான் என ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) தவறிழைக்காது என தேர்தல் ஆணையம் கூறிவரும் நிலையில் ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் இந்த அதிர்ச்சி தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 16-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது, புல்தானா என்ற இடத்திலுள்ள சுல்தான்பூர் வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளரின் தேங்காய் சின்னத்திற்கு சிலர் வாக்களித்தனர். ஆனால் தாமரை சின்னத்தில் வாக்குப் பதிவானதை குறிக்கும் விளக்கு எரிந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தவறு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதும் வருவாய் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக சேவகர் அனில் கால்காலி என்பவர் ஆர்டிஐ மூலம் சமீபத்தில் கேள்விகேட்டார். அவருக்கு விசாரணை அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் நேற்று பதிலாக கிடைத்துள்ளது.
அதில்,’ வாக்குச்சாவடியில் (எண்-56) வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் இடத்தில் இருந்த சுயேட்சை வேட்பாளருக்கான தேங்காய் சின்னத்தில் வாக்களித்தால், 4-வது இடத்தில் இருந்த பா.ஜ.கவின் தாமரை சின்னத்தில் விளக்கு எரிந்து வாக்கு அவருக்கு சென்றுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திர தவறு இருப்பது தொடர்பாக வாக்காளர்கள் காலையில் புகார் தெரிவித்தனர். ஆனால் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அதை நிராகரித்துள்ளனர். அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பிப்ரவரி 21-ம் தேதி அங்கு தேர்தல் நடந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி என்பதை உறுதி செய்துள்ளது என கால்காலி கூறியுள்ளார்.