பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா கைதிகளுக்கான சீருடையை அணிவதில்லை என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் மூவரும் ஓராண்டு சிறை வாசகத்தை அனுபவித்துவிட்டனர். இதனிடையே, சிறை சென்றதில் இருந்தே சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைககள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுது. சிறையில் சசிகலா தனக்கென்று தனி அறையை பயன்படுத்துவதாகவும், சிறையில் இருந்து ஷாப்பிங்கிற்காக வெளியே செல்வதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மற்ற கைதிகளை போன்று கைதிகளுக்கான சீருடையை அணிவதில்லை என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். ரேகா ஷர்மா சமீபத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றிருக்கிறார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் அவர் கேட்டபோது, சசிகலா உயர் பிரிவில் உள்ளதாகவும், அதனால் அவர் தனது சொந்த உடையை பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறியதாகவும் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.