பீகாரில் அரசுப் பள்ளியில் அரங்கேறிய ஆபாச நடனம் தொடர்பான வீடியோ வெளியாக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சஹார்சா மாவட்டத்தில் உள்ள ஜலாய் காவல் நிலையப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பொழுதுபோக்கிற்காக கலை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் நடத்தப்பட்ட ஆபாச நடனம் தொடர்பான வீடியோதான் தற்போது வெளியாகி காண்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது..
இந்த காணொளியில், மது அருந்திவிட்டு போஜ்புரி பாடல்களுக்கு 4 பெண்கள் மற்றும் அவர்களோடு சில ஆண்களும் முகம் சுழிக்கும் வகையில் நடனமாடியிருக்கிறார்கள். திருமண ஊர்வல நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஜலாய் காவல்நிலைய பொறுப்பாளர் மம்தா குமாரி கூறுகையில்,” இதுபோன்ற எந்த நிகழ்ச்சிக்கும் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. வைரலான வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசுப் பள்ளியில் இப்படியொரு விழாவை நடத்த கல்வித்துறை அனுமதித்தது எப்படி? என்று மக்கள் தங்களின் கொந்தளிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனால், கல்வி கற்கும் பள்ளிக்கூடங்கள் ஒழுங்கின்மைக்கு உதாரணமாக மாறியிருப்பது, அம்மாநில கல்வித்துறையின் செயல்பாடுகளில் மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியிருக்கிறது.