குழந்தைகளைப் பாதுகாக்க நிறைய சட்டங்கள் இருந்தும், பல இடங்களில் அவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், குஜராத்தில் பெற்ற மகளையே, தாய் ஒருவர் தோசை கரண்டியால் தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் 9 வயது சிறுமி ஒருவரைக் கீழே தள்ளி தோசைக் கரண்டியைக் கொண்டு அடிக்கிறார். அதில் வலி தாங்க முடியாமல் அந்தச் சிறுமி கதறி அழுகிறார். ஆனாலும் கல்நெஞ்சம் கொண்ட அந்தப் பெண், சிறுமியின் கழுத்தையும் பிடித்து நெரிக்கிறார். பின்னர், அந்தச் சிறுமியை தரதரவென இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைகிறார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்க்கும் பலரும் அந்தப் பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதன் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் குஜராத்தியில் பேசியதால், இது குஜராத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படியே, விசாரணையின் இறுதியில், இச்சம்பவம் குஜராத்தின் கட்ச் நகரில் உள்ள மதாபார் கிராமத்தில் நடைபெற்றிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அந்தச் சிறுமி தெரியாமல், வீட்டில் எண்ணெய்யை கொட்டி இருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த அவரது தாய் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார். அதை, அவரது கணவரே வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்.
2 ஆண்டுகளுக்கு முன் இதை வீடியோ எடுத்த கணவரும், அந்தப் பெண்ணும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். எனினும் சிறுமி, அந்தப் பெண்ணுடன் ஜெய்ப்பூர் நகரில் ஒன்றாக வசித்து வருகிறார். இந்த விசயத்தில், பெண்ணின் முன்னாள் கணவர் முதலில் அமைதியாக இருந்திருக்கிறார். வீடியோ வைரலானதும், முன்னாள் கணவர் போலீஸுக்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் போலீஸார் இதுகுறித்து 323 பிரிவின்கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.