மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவி ஒருவரின் பையில் நாகபாம்பு ஒன்று மறைந்திருந்த சம்பவம் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
பாஜக பிரமுகர் கரண் வசிஷ்தா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஷாஜாபூரிலுள்ள பதோனி பள்ளியில் இது நடந்திருக்கிறது. வசிஷ்தா தனது பகிர்வில், 10ஆம் வகுப்பு மாணவியின் புத்தக பையில் பாம்பு இருந்தது கண்டறியப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒரு நபர் மெதுவாக புத்தகப்பையை திறந்து புத்தகங்களை வெளியேக் கொட்டுகிறார். பின்னர் அதை தலைகீழாக உதறியபோது உள்ளே சுருண்டு படுத்திருந்த நாகபாம்பு கீழே விழுகிறது.
10ஆம் வகுப்பு மாணவி காலை பள்ளிக்குச் சென்றதும் தனது பைக்குள் ஏதோ ஒன்று அசைவதைப்போல் இருப்பதாக தனது ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். ஆசிரியர்கள் அதனை பரிசோதித்தபோது உள்ளே நாகபாம்பு படுத்திருந்தது என்று வசிஷ்தா குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிர்ஷ்டவசமாக அந்த நாகபாம்பு யாரையும் தாக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஷம் நிறைந்த அந்த நாகபாம்பு ஒரு கடி கடித்தால் போதும்; ஆளை கொல்லும் வல்லமையுடையது. ஒரெ நேரத்தில் 20 பேரை கொல்லகூடிய விஷம் ஒரு பாம்பில் இருக்கிறது. இந்த பாம்புகள் ஆறரை அடி வரை வளரும் தன்மையுடையது. இவை பொதுவாக பல்லிகள், சிறிய பாலூட்டிகள் போன்றவற்றை இரையாக உண்ணக்கூடியவை.