கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 135 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, முழு பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தியை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் பரவியது. இதனால் ஆச்சரியமடைந்த பலரும் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சென்று பார்த்தார்கள். ஆனால் அப்படி எந்த ஒரு பதிவும் இல்லை. இதையடுத்து விராட் கோலி உடனடியாக அந்த பதிவை நீக்கியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபோது கோலி இந்த ஸ்டேட்டசை வெளியிட்ட 17 நிமிடங்களுக்கு பின் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டதாகவே உள்ளது. வைரலான அந்த ஸ்க்ரீன்ஷாட்டை ஆராய்ந்தபோது அவரது பெயருக்கு அருகே இருக்கும் வெரிபிகேஷன் பேட்ஜ் சற்று கீழே இறங்கியிருந்தது. பெயருக்கு அருகே இல்லை. அவர் வெளியிட்ட மற்ற ஸ்டேட்டஸ்களில் வெரிபிகேஷன் பேட்ஜ் பெயருக்கு அருகிலேயே உள்ளன. இதனை வைத்து பார்க்கையில் அந்த ஸ்க்ரீன் ஷாட் போலியானது என்பது உறுதியாகி உள்ளது.
அதேபோல் மற்றொரு ஸ்க்ரீன் ஷாட்டில் விராட் கோலி ராகுல் காந்தியின் படத்தை பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்ததாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அதை பார்த்தவுடனே போலி என்று தெரிந்துவிட்டது. காரணம், அவர் சூர்யகுமார் யாதவை பாராட்டி வைத்த ஒரு ஸ்டேட்டஸை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, அதன் மீது ராகுல் காந்தி படத்தை வைத்து எடிட் செய்து இருப்பது தெளிவாக தெரிந்தது. இதன் மூலம் இந்த 2 படங்களுமே போலியானது என்பது Fact Check மூலம் உறுதியானது.