புகழ்பெற்ற ‘ரஸ்புடின்’ பாடலுக்கு கேரளாவின் திருச்சூர் மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த மாணவியும், மாணவரும் ஆடிய நடனம் வைரல் ஆனது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதனை ‘லவ் ஜிகாத்’ என்று பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த அதேவேளையில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலர் அதே பாடலுக்கு நடனம் ஆடி #ResistHate என்ற ஹேஷ்டேக்கில் வீடியோ வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
போனி எம் இசைக்குழுவின் பிரபல பாப் பாடலான ’ரஸ்புடின்’ பாடலுக்கு கடந்த மார்ச் 23 ஆம் தேதி கேரளாவின் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர் நவீன் கே ரசாக்கும், மூன்றாம் ஆண்டு மாணவி ஜானகி ஓம்குமாரும் உற்சாகமுடன் கல்லூரியில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டனர். ’ரஸ்புடின்’ பாடலுக்கு ஏற்ப இவர்களின் சுறுசுறுப்பான உற்சாகமான நடனம் சமூக வலைதளங்களில் வேற லெவல் வைரலாகி பாராட்டுக்களைக் குவித்தது.
கொரோனா சூழலில் மருத்துவர்களும், மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்களும் தொடர்ச்சியாக மன அழுத்தத்தில் பணிபுரியும் சூழலில் இவர்களின் நடன வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். நவீன் கே ரசாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த நடன வீடியோவுக்கு இதுவரை 6 லட்சம் பார்வையாளர்களுக்குமேல் கடந்துள்ளது. அதேசமயம், இவர்களின் வீடியோவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் என்பவர், ஜானகி ஓம்குமார் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருடன் நடனம் ஆடும் நவீன் கே ரசாக் இஸ்லாமியர் என்பதாலும் “ஜானகியின் பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். இதில் ஏதோ தவறு இருக்கிறது. நவீன் கே ரசாக் ஒரு இஸ்லாமியர். ஜானகி தந்தைக்காகவும் அவரின் மனைவிக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். அவர்களுக்கும் நிமிஷாவின் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது” என்று கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தனது ஃபேஸ்புக்கில் இவர்கள் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் பலர் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில்தான், பாஜகவினரின் இந்தக் கருத்தை கண்டிக்கும் விதமாக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பலரும் #ResistHate ஹேஷ்டேக்கில் இதே பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ’வெறுப்பது உங்கள் திட்டம் எனில், அதை எதிர்ப்பது எங்கள் முடிவு' என்று (If the intention is hate, then the decision is to resist) என்று ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
(ஜானகி ஓம்குமார்)
அதோடு, காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் “வெவ்வேறு மதங்களின் காரணமாக இந்துத்துவா விஷத்தை ஊற்றுவதற்கு பதில் கைத்தட்டலுக்கும் ஊக்கத்திற்கும் தகுதியானவர்கள் இந்த மாணவர்கள். இளமையான இந்தியாவின் சிறந்த இளைஞர்களாகவும் தோழர்களாகவும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக வெளிப்படுவார்கள்” என்று இந்த வைரல் வீடியோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
(நவீன் கே ரசாக்)
இந்நிலையில், நடனம் ஆடி வைரலான நவீன் கே ரசாக் இந்த சர்ச்சைக் குறித்து பேசும்போது, ”சமீபத்தில் நடன இயக்குநர் வனேசா சகோ இன்ஸ்டாகிராம் வீடியோவில் ரஸ்புடின் பாணியில் நடனம் ஆடினார். அதில், ஈர்க்கப்பட்டு நாங்களும் ரஸ்புடின் பாடலுக்கு நடனமாட முடிவுசெய்து பயிற்சி எடுத்து வகுப்பு முடிந்தவுடன் நடனமாடி வீடியோ எடுத்தோம். அடுத்ததாக வேறொரு பாடலுக்கும் நடனமாடி வீடியோ வெளியிடவுள்ளோம். அந்த வீடியோவும் எதிர்பார்ப்புகளுக்கு குறைவில்லாதது. நாங்கள் புதிய தலைமுறையினர். இதுபோன்ற வகுப்புவாத கருத்துகள் குறித்து கவலைக்கொள்ளவில்லை” என்று கூறியுள்ளதோடு தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜானகி ஓம்குமாருடன் அமர்ந்து ’தங்களை ஆதரித்தவர்களுக்கு நன்றி’ தெரிவித்துள்ளனர்.
வைரல் ஆன நவீன் கே ரசாக்கும், ஜானகி ஓம்குமாரும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாய் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க நடன வீடியோக்களாக குவிந்துக்கிடக்கின்றன.