சமூக வலைதளங்களே இன்று செய்திகளின் நாடித்துடிப்பாக விளங்கி வருகின்றன. அதில் பல நல்ல விஷயங்களும், கெட்ட செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இப்படி வரும் கெட்ட செய்திகளால் ஆபத்தும் நிறைந்துள்ளன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில், இன்ஸ்டாவில் மதம் குறித்து தவறாகப் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட தகவலால், நேற்று அம்மாநிலத்தில் இருதரப்புக்கு இடையே மோதல் வெடித்தது.
மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டம் பழைய சிட்டி பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினனுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில் நடந்த இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியும், வாகனங்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் 7 - 8 வாகனங்கள் சேதமாகியுள்ளன. அதில் ஒரு போலீஸ் வாகனமும் அடக்கம். இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 போலீஸார் உட்பட 8 பேர் படுகாயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர். மேலும், இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வன்முறை நடந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் அதில் இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக ராம்தாஸ்பேத் காவல் நிலையத்திலும், மற்றொன்று வன்முறை மோதல்கள் தொடர்பாக பழைய நகர காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அரோரா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.