தேரா சச்சா சவுதா அமைப்பினரின் வன்முறைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேரா சச்சா சவுதா அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளார். வன்முறை சம்பவங்கள் வேதனை அளிப்பவையாக இருந்தன என பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைவரும் அமைதி காக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர், நிலவரம் குறித்து தேசிய பதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் உள்துறை செயலாளர் ராஜீவ் மேஹ்ரிஷியுடன் ஆலோசனை நடத்தியதாகவும், நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அமைதி திரும்ப அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். வன்முறை குறித்து கவலை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமைதி திரும்ப ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.