மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 27 ஆம் தேதியுடன் 41 நாள் மண்டல பூஜைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் மகர விளக்கு பூஜைக்காலத்தின் ஆங்கில புத்தாண்டு தினமான இன்று, அதிகாலை முதலே சபரிமலை சன்னிதானத்தின் பெரிய நடைப் பந்தலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது காணப்பட்டது. புத்தாண்டு தினத்தன்று ஐயப்பனை நேரில் தரிசித்தால் அந்த ஆண்டு முழுவதும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது
இதற்காக இன்று காலையிலிருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தாண்டு தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மட்டும் தரிசனத்திற்காக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். இதனால் சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முதன் முதலாக மாலை அணிந்து கன்னி சாமியாக வந்திருந்த இலங்கை எம்பி ஜீவன் தொண்டமான், சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு 38,000 பிஸ்கட் பாக்கெட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் தேவசம்போர்டு உதவி செயல் அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.