ஹரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்திற்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னதாக, அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்து.
பின்னர், அசோஜ் அமாவாஸ்யா பண்டிகை காரணமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகளில் அம்மாநிலக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அம்மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், இதற்கு முன்பாகவே மல்யுத்த போட்டியிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர், தாயகம் திரும்பிய அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, வினேஷ் போகத், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடலாம் என தகவல் வெளியானது. மேலும், அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவித்தன. ஆயினும், அவர் தேர்தலில் போட்டியிடப்போவது குறித்தோ அல்லது கட்சியில் இணைவது குறித்தோ எந்த உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை.
இதையும் படிக்க: வடகொரியா | வெள்ளத்தால் உயிர்பலி.. தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை!
இந்த நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும், இன்று (செப்.4) டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, இருவருக்கும் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர்கள் காங்கிரஸில் இணையும்பட்சத்தில் வினேஷ் போகத் ஜூலானா தொகுதியிலும், பஜ்ரங் புனியா பட்லி தொகுதியிலும் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.
ஹரியானா தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமை இதுவரை 66 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. அதில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
”அவர்கள் இந்தத் தேர்தலில் களமிறக்கப்படுவார்களா என்பது குறித்து இன்று அல்லது நாளைக்கு முடிவு தெரிந்துவிடும்” என காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிட விரும்பியதாகவும், ஆனால் அவர் குருகிராமுக்கு அருகிலுள்ள மற்றொரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சி விரும்பியதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவரும், முன்னாள் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கிற்கு எதிராக 2023-ல் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மீதான போராட்டத்தில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதன்காரணமாகவே, அவர்கள் காங்கிரஸில் இணைந்து போட்டியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தேர்தலில் களமிறங்கும் பட்சத்தில், அது பாஜகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.