ஹரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்திற்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னதாக, அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்து. பின்னர், அசோஜ் அமாவாஸ்யா பண்டிகை காரணமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையடுத்து, தேர்தல் பணிகளில் அம்மாநிலக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அம்மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், இதற்கு முன்பாகவே மல்யுத்த போட்டியிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர், தாயகம் திரும்பிய அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, வினேஷ் போகத், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியானது. மேலும், அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன.
அதை உறுதிசெய்யும் வகையில் மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் இன்று, காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். முன்னதாக, அவர்கள் காங்கிரஸின் மூத்த தலைவர்களைச் சந்தித்திருந்தனர்.
இதற்கிடையே, வினேஷ் போகத், இந்திய ரயில்வேவில் வடக்கு ரயில்வே சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்த பதவியை ராஜினாமா செய்தார். தனது சொந்த காரணங்களுக்காக ரயில்வே பதவியை விட்டுவிலகுவதாக ராஜினாமா கடிதத்தில் வினேஷ் போகத் குறிப்பிட்டுள்ள நிலையில் அவரின் செயலுக்கு விளக்கம் கேட்டு ரயில்வே ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் காங்கிரஸில் சேர்ந்தது குறித்து பேசிய வினேஷ் போகத், ”கடந்த வருடம் போராட்டத்தின்போது நாங்கள் ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன. பெண்களுக்காக முன்வந்து சண்டையிடும் ஒரு கட்சியில் சேர்வதை பெருமையாக நினைக்கிறன்” எனத் தெரிவித்தார்.
கடந்த வருடம் பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டை விசாரிக்கக்கோரி 6 மாதகாலமாக நடந்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் தலைமை இதுவரை 66 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதர வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. அதில் வினேஷ் போகத் ஜூலானா தொகுதியிலும், பஜ்ரங் புனியா பட்லி தொகுதியிலும் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.