உத்தரப்பிரதேசம் மாநிலம் பாராபங்கி என்ற கிராமத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பயந்த சிலர் சராயு நதியில் குதித்து தப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4000 பேர் கொரோனா தொற்றால் பலியாகி இருக்கின்றனர். மொத்தம் 2.22 லட்சம்பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசமும் கொரோனா தொற்றால் கடும் சேதத்தை சந்தித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறைகளும் இருந்து வருகிறது.
இந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பாராபங்கி கிராமத்தில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள மாஜிஸ்ட்ரேட் தலைமையிலான மருத்துவக் குழு சென்றுள்ளது.
ஆனால் அந்த கிராமத்தில் வெறும் 14 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் சிலர் தடுப்பூசியில் இருந்து தப்பிக்க கிராமத்தில் ஓடும் சராயு நதியில் குதித்து தப்பித்துள்ளனர். இதற்கு காரணம் தடுப்பூசி குறித்து பரவிய வதந்தியே காரணம் எனக் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி கிடையாது அது ஒரு விஷ ஊசி என பரவிய வதந்தியால் அச்சமடைந்த சிலர் நதியில் குதித்துள்ளனர்.