ஹிர்த்திக் ரோஷன், சையீஃப் அலிகான் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
புஷ்கர் - காயத்ரி எழுத்து இயக்கத்தில், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக விக்ரம் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவனும், கேங்ஸ்டராக வேதா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்து மிரட்டியிருப்பார்கள். குறிப்பாக வில்லத்தனத்துடன், மாதவனுக்கு உதவிப் புரிபவராக விஜய் சேதுபதி அருமையாக நடித்திருப்பார். ‘ஒரு கத சொல்லட்டா சார்’ என்று விஜய் சேதுபதி கதை சொல்ல ஆரம்பித்து, த்ரில்லராக ஆக்ஷன்களுடன் நிறைந்த திரைக்கதை ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. இதனால் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இந்தியில் இந்தப் படத்தை அதன் இயக்குநர்களான புஷ்கர் காயத்ரியே இயக்குவதாக அறிவித்தனர். பின்னர் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், அதன்பிறகு அதிவேகத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, அண்மையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஒய்நாட் ஸ்டூடியோஸ், பிளான் சி ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வந்தது.
வருகிற செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. இதையடுத்து இன்று டீசர் வெளியாகியுள்ளது. மாதவன் கதாபாத்திரத்தில் சையீஃப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிர்த்திக் ரோஷனும் நடித்துள்ளனர். ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும் நடித்துள்ளனர். தமிழில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவே , இந்தி ரீமேக்கிலும் பணிபுரிந்துள்ளனர்.
கதை மாற்றம் செய்யப்படமால் அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தாலும், விஜய் சேதுபதியின் நடிப்புடன் ஒப்பிடும்போது ஹிரித்திக் ரோஷனின் நடிப்பு இந்தப் படத்தில் எடுபடவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.