கொலை, ஆள் கடத்தல் , நிலமோசடி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய உத்தரப்பிரதேச காவல்துறையினர் சென்றனர். இதனை முன்கூட்டியே அறிந்திருந்த துபே, காவல்துறை அதிகாரி உட்பட 8 காவலர்களை சுட்டுக்கொன்று தப்பியோடினார்.
நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்ட இந்த சம்பவத்தில், மத்திய பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். அடுத்த நாளே விகாஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விகாஷை அழைத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாகவும் அப்போது அவர் தப்பமுயன்றதால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் விகாஷின் தம்பி தீப் பிரகாஷ் தலைமறைவாகியுள்ளார். போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தானும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் அவர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசியுள்ள விகாஷின் தாயார், தீப் பிரகாஷ் வெளியே வந்து போலீசாரிடம் சரணடைந்துவிடு. இல்லையென்றால் போலீசார் உன்னையும், உன் குடும்பத்தையும் கொல்வார்கள். நீ எதுவுமே செய்யவில்லை. உன் அண்ணனுடன் தொடர்பில் இருந்ததால் நீ ஓடி ஒளிய வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்