பிரதமர் மோடி வேண்டுகோளை அடுத்து நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டு வாசலில் நின்று அகல்விளக்கு, மெழுகுவர்த்தி ஏந்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் இந்த பேச்சினை அடுத்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துக்கள் கடந்த சில தினங்களாக முன் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகள் மற்றும் டார்ச் லைட்டுகளை ஏற்றி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தும் தனது போயஸ் கார்டன் வீட்டில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு வாசலில் நின்று மெழுகுவர்த்தி பொருத்தி ஏந்தினார். அதேபோல் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் வீட்டு வாசலில் நின்று விளக்குகளை ஏற்றினர். நடிகை நயன்தாரா வீட்டின் பால்கனியில் நின்று விளக்கை ஏந்தினார்.