ஐபிஎல் அணிகளில் ஒரு முக்கியமான அணி ஆர்.சி.பி. எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. பல முக்கிய வீரர்களை கொண்டிருந்தாலும் அந்த அணி இதுவரை ஒருமுறைக் கூட கோப்பையை வென்றதில்லை. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் அதிகம் கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளும் திடீர் மாற்றத்தை சந்தித்துள்ளன. அணியின் லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிங்கத்தின் படம் இடம்பெற்றிருக்கும் புதிய லோகோவுக்கு ஆர்சிபி ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆர்சிபியின் புதிய அவதாரத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ள விஜய் மல்லையா மறைமுகமாக கிண்டலும் அடித்துள்ளார்.
''புதிய அத்தியாயம் தொடங்குகிறது'' என பெருமையோடு வீடியோ ஒன்றை ஆர்சிபி வெளியிட்டுள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள விஜய் மல்லையா, ''நல்லது. ஆனால் கோப்பையை வெல்லுங்கள்'' என தெரிவித்துள்ளார்.
''எதிர் போட்டியாளர்களே! நீங்கள் தயாரா? இல்லையா? இதோ நாங்கள் வருகிறோம்'' என்ற ஆர்சிபியின் ட்வீட்டுக்கு கருத்து பதிவிட்டுள்ள மல்லையா, ''நிச்சயமாக. சிங்கம்போல கர்ஜியுங்கள். ஆனால் ஐபிஎல் கோப்பையை சொந்த வீடான பெங்களூருக்கு கொண்டு வாருங்கள்'' என தெரிவித்துள்ளார். இன்னும் சில பதிவுகளில் ''அனைத்து ஆர்சிபி ரசிகர்களும் ஐபிஎல் கோப்பையை எதிர்பார்க்கிறார்கள்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் விராட் கோலி குறித்து குறிப்பிட்டுள்ள மல்லையா, ''இந்தியாவின் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இருந்து விராட் கோலி ஆர்சிபிக்கு வந்தார். இந்திய அணிக்கு சிறந்த வெற்றிகளை தேடி தந்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். அனைத்து ஆர்சிபி ரசிகர்களும் ஐபிஎல் கோப்பையை எதிர்பார்க்கிறார்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.