இந்திய வங்கிகளில் 9000 கோடிக்கு மேலாக கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கிங் பிஷர் விமானத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள 17-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கிட்டத்தட்ட 9000 கோடிக்கு மேலாக கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பி தராமல் இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். இதனையடுத்து மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை வைத்தது.
இதனை எதிர்த்து விஜய் மல்லையா இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் நீதிமன்றம் ஏப்ரல் 20-ஆம் தேதி அதனை நிராகரித்தது. இதனையடுத்து அவர் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடையும் உச்ச நீதி மன்றம் மே 14 -ஆம் தேதி நிராகரித்த நிலையில் விஜய் மல்லையா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்கில் ஆஜராக மும்பைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் மும்பை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு முதலில் சிபிஐ காவலில், பின் அமலாக்கத்துறை காவலில் எடுக்கப்பட்டு விஜய் மல்லையா விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் கூறப்படுகிறது.