வீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு

வீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு
வீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு
Published on

வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக வங்கிக் கடன் வழங்கிய புகாரில், ஐசிஐசிஐ நிறுவன முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 

வீடியோகான் நிறுவனத்திற்கு கடந்த 2012ம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி சார்பில் ரூ3250 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்தக் கடன் வழங்கப்பட்ட போது வங்கியின் தலைவராக சந்தா கோச்சார் இருந்தார். 

இதனிடையே, சந்தா கோச்சார் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடாக வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் அளித்துள்ளதாக புகார் எழுந்தது. அதாவது, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வரும் நிறுவனத்தில் வீடியோகான் குழுமத்தின் வேணுகோபால் தூத் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார்.

எனவே தனது கணவரின் நிறுவனம் பயன்பெறும் வகையில் இந்தக் கடன் அளிக்கப்பட்டதாக வங்கியின் பங்குதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. அதுவரை சந்தா கோச்சார் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயும் தன்னுடைய தரப்பில் விசாரணை மேற்கொண்டு வந்தது. 

இந்நிலையில், முறைகேடாக வங்கி கடன் வழங்கிய விவகாரத்தில் வேணுகோபால் தூத்தின் வீடியோகான், தீபக் கோச்சாரின் நுபவர் ரினவபள் நிறுவனங்கள் மீது சிபிஐ இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த எஃப்.ஐ.ஆர் பதிவில் ஐசிஐசிஐ முன்னாள் தலைவரான சந்தா கோச்சார் பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும், வீடியோகான், நுபவர் நிறுவனங்களின் மும்பை அலுகலங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.  

கடந்த ஆண்டு தனது முதல்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியிருந்த நிலையில் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து, வழக்கில் தொடர்புடையவர்களிடம் இனி விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com