உத்தரபிரதேசத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு மதிய உணவில், சோறுடன் மஞ்சள் கலந்த தண்ணீர் வழங்கப்பட்டதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சிதாபுர் மாவட்டத்தின் விச்பாரியா கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில், ஏராளமான சிறுவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தினமும் மதிய உணவு பள்ளியில் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சோறு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரை மதிய உணவாக அளித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து அந்தப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், மாணவர்களுக்கு சோறு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டதாக பின்னர் விளக்கமளித்தனர். மாணவர்கள் உணவு உட்கொண்ட பிறகு வீடியோ எடுத்து, தீய எண்ணத்துடன் அதனை சிலர் வெளியிட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இதனிடையே அந்த வீடியோவை பதிவு செய்த செய்தியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கியது சர்ச்சையாகி இருந்தது நினைவுகூரத்தக்கது.