உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாத்பாத்தின் இந்திரபுரம் பகுதியில் சாலைப் பணியில் காவலர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவரை, பெண் ஒருவர் செருப்பால் தாக்கியுள்ளார். இக்காட்சியை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் நேற்று (அக். 10) பகல்பொழுதில் நடைபெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தின்படி அந்தப் பெண் பயணித்த இ-ரிக்ஷாவில் நம்பர் பிளேட் இல்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, இந்திராபுரம் காவல் நிலைய டி.எஸ்.ஐ-யால் அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மூத்த போக்குவரத்து காவல்துறை அதிகாரியான பூனம் மிஸ்ரா, ’அந்தப் பெண் ஆத்திரத்துடன் செயல்பட்டுள்ளார். இ-ரிக்ஷாக்களால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக எங்களுக்கு பல புகார்கள் வந்துள்ளன.
சம்பவத்தன்று, போக்குவரத்து காவலர் ஒருவர், சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணிடம் அவருடைய இ-ரிக்ஷாவை அங்கிருந்து நகர்த்தும்படி கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண் அவரிடம் தவறாக நடந்துகொள்ளத் தொடங்கினார். அப்பெண் இதேபோன்று, கடந்தகாலங்களிலும் நடந்துகொண்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.