கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், புல்பள்ளி அருகே உள்ள ஒரு வாய்க்காலில், நேற்று மதியம் தவறிவிழுந்த யானை குட்டி ஒன்று மீள முடியாமல் தவித்து வந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், பிறந்து சில வாரங்களேயான அந்த யானை குட்டியை வாய்க்காலில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். யானைக் குட்டியை பார்ப்பதற்கு அப்பகுதி மக்களும் ஆர்வமாக இருந்தனர்
இதனிடையே யானைக்குட்டியை பத்திரமாக மீட்ட வனத்துறை அதிகாரிகள், மருத்துவ சோதனை செய்ததில் அதற்கு எந்த பாதிப்பும் இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து, குட்டி யானை நடக்கக்கூடிய நிலையில் இருந்தால் அதனை வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து, காட்டில் இருந்த அதன் தாயிடம் கொண்டு சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.
அந்த பகுதி கிட்டத்தட்ட காடுகளால் சூழப்பட்டுள்ள பகுதி என்பதால், யானை கூட்டம் காணப்படுவதாகவும், தாயுடன் வந்த யானை பள்ளத்தில் விழுந்த நிலையில், செல்ல வழி தெரியாமல் சிக்கி இருந்ததாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.