ஓர் அடர்வனத்தில் மலைப்பாம்பு ஒன்று மானை முழுசாக அப்படியே விழுங்கும் காட்சி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா அச்சத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்க, காட்டில் வாழும் விலங்குகள் எல்லாம் ஜாலியாக வெளியே சுற்றி வருகின்றன. அவ்வாறான வீடியோக்களை உலகெங்கிலும் இருக்கும் வன உயிரின ஆர்வலர்களும், அதிகாரிகளும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் பிரவீன் கஸ்வான் என்ற வனத்துறை அதிகாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து காட்டு விலங்குகள் செயல்பாடுகள் குறித்த வீடியோக்களை தொடர்ந்து பதிவித்து வருகிறார். அதன்படி இன்று உத்தரப்பிரேச மாநிலத்தின் துத்வா தேசியப் பூங்காவில் பர்மா மலைப்பாம்பு ஒன்று முழு மானை அப்படியே விழுங்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பிரவீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "இதை என்னால் நம்பவே முடியவில்லை, இந்த பர்மா மலைப் பாம்பு கடுமையான பசியில் இருக்கிறது, ஒரு முழு மானை அப்படியே விழுங்குகிறது" என பதிவிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பலரும் "எப்படிதான் இந்தப் மலைப் பாம்புக்கு ஒரு முழு மான் ஜீரணமாகிறதோ" என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.