உத்தரபிரதேசத்தில் பெண் நோயாளி ஒருவரை நர்ஸ் ஒருவர் முடியை பிடித்து இழுத்துச்சென்று படுக்கையில் படுக்க வைத்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த நோயாளியை தவறாக நடத்தவில்லை எனவும், அவர் மிகவும் வன்முறையுடன் நடந்துகொண்டதால்தான் அவரை அப்படி கையாள வேண்டி இருந்ததாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிதாப்பூர் மாவட்ட மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவில், பெண் நர்ஸ் ஒருவர் பெண் நோயாளி ஒருவரின் தலைமுடியை பிடித்து இழுத்துச் செல்கிறார். இழுத்துச் சென்று காலியான ஒரு படுக்கையில் அவரை தள்ளுகிறார். அவருடன் மற்றொரு ஆணும் உடன் செல்கிறார். அவரும் அந்த படுக்கையின் அருகே நிற்பது வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
இதுகுறித்து சிதாப்பூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆர்.கே சிங் கூறுகையில், ’’அக்டோபர் 18ஆம் தேதி அந்த பெண் நோயாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு, அந்த பெண்ணின் குடும்பத்தினர் சென்றபிறகு, இரவு 12 - 1 மணியளவில் கழிவறைக்குச் சென்ற அந்த பெண் திடீரென வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அந்த பெண் தனது வளையல்களை உடைத்து, ஆடையை கிழித்துள்ளார். இது அங்கு சிகிச்சையில் இருந்த சக பெண் நோயாளிகளிடையே அச்சத்தை கிளப்பியது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் குறுக்கிட்டு அவரை தடுக்கவேண்டியதாயிற்று. அங்கு பணியிலிருந்த பெண் நர்ஸ் போலீஸ் மற்றும் சக ஊழியர்களுக்கு இதுகொடுத்து தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் உடனடியாக அங்கு சென்று உதவியுள்ளனர்’’ என்று கூறினார்.
நர்ஸின் நடவடிக்கை குறித்து கேட்டபோது, நோயாளிக்கு ஊசிபோட்டு எந்த ஒரு சிகிச்சை அளிப்பதற்கு முன்னும் அவரை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் அதன்பின்னரே அந்த நோயாளியை சமாளிக்க முடிந்ததாகவும், பின்னர் அவருடைய குடும்பத்தினர் வந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச்சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.