பெங்களூருவில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் கட்டுமானப் பணியின்போது, திடீரென இரும்புத் தூண் இடிந்து சாலையில் விழுந்ததில், தாய் மற்றும் 2 வயது மகன் உயிரிழந்தனர். மேலும் தந்தை மற்றும் 2 வயது மகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அவுட்டர் ரிங் ரோட்டில் உள்ள நாகவராப் பகுதியில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று காலை ஹென்னூர் சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. சுமார் 11 மணியளவில் அந்த சாலையில் லோகித் மற்றும் தேஜஸ்வினி தம்பதி, தங்களது இரட்டைக் குழந்தைகளான 2 வயது மகன் விகான் மற்றும் 2 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது மெட்ரோ ரயில் பாதைக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகளாலான 40 அடி உயர தூண் திடீரென சரிந்து லோகித் மற்றும் தேஜஸ்வினி தம்பதி சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில், 4 பேரும் காயங்களுடன் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
எனினும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தேஜஸ்வினி மற்றும் 2 வயது மகன் விகான் சிகிச்சை பலனின்றி உயிழந்தனர். காயங்களுடன் உயிர் தப்பிய லோகித் மற்றும் அவரது 2 வயது மகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு மெட்ரோ ரயில் பாதை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த தேஜஸ்வினியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவதாக பெங்களூரு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த தேஜஸ்வினி குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே. சிவக்குமார், மாநிலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தரம் வாய்ந்தவைகளாக இல்லை என்றும், மாநில அரசு இந்த பணிகளில் 40 சதவிகிதம் கமிஷன் அடித்துக்கொள்கிறது என்பதற்கு இந்த விபத்தே ஒரு சான்று என்றும் ஆளும் கட்சியான பாஜகவை குற்றஞ்சாட்டியுள்ளார்.