துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தலைநகர் புதுடெல்லியில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக இந்த முடிவினை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கு கோபால கிருஷ்ண காந்தியின் பெயர் பல்வேறு தரப்பினரால் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் கோபால கிருஷ்ண காந்தியிடம் சோனியாகாந்தி பேசியதாகவும், அதன்பின் அவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிற்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.