தெலங்கானா முதலமைச்சரின் பங்களாவில் வளர்ந்து வந்த செல்ல நாய் மரணமடைந்ததை அடுத்து அதற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ், அங்கு அரசு பங்களா பிரகதி பவனில் வசித்து வருகிறார். இங்கு 11 செல்ல நாய்கள் வளர்ந்து வருகின்றன. இதில், ஹஸ்கி வகையை சேர்ந்த 11 மாத நாய்-க்கு சில நாட்களுக்கு முன் உடல் நிலை மோசமானது. கடுமையாக உடல் கொதித்தது.
சைவம் மட்டும் சாப்பிடும் ஹஸ்கியால், பால் கூட குடிக்க முடியவில்லை. மூச்சு விடவும் சிரமப்பட்டதால் கடந்த புதன்கிழமை, பஞ்சரா ஹில்ஸில் இருக்கும் தனியார் விலங்குகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அதை பராமரித்த ஆசிப் அலி. அங்கிருந்த கால்நடை மருத்துவர்கள் லட்சுமி, ரஞ்சித் ஆகியோர் அதற்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த நாய் இறந்துவிட்டது.
(இதுபோன்ற நாய்தான்...)
இதையடுத்து ஆசிப் அலி, சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததே செல்ல நாயின் மரணத்துக்கு காரணம் என்று கூறி பஞ்சரா ஹில்ஸ் போலீஸில் புகார் செய்தார்.
போலீசார், டாக்டர்கள் லக்ஷ்மி, ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது தெலங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.