ஆதார் அட்டை அடிப்படையில் வழங்கப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று வெளியான தகவலுக்கு ஆதார் ஆணையமும், தொலைத்தொடர்பு துறையும் மறுப்பு தெரிவித்துள்ளன.
அரசின் திட்டங்களை பெற ஆதார் அவசியம் என்றும் அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி அதிரடியான தீர்ப்பை வழங்கியது. அத்தோடு, எந்தெந்த விவகாரங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டது.
வங்கிக் கணக்குகள் துவங்க, சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும், பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. அதே போல் சிம் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை பெற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ஆதார் அட்டை அடிப்படையில் வழங்கப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவ்வாறு வெளியான தகவல் உண்மை இல்லை என்று தொலைத்தொடர்பு துறையும், ஆதார் ஆணையமும் தெரிவித்துள்ளது. ஆதார் அடிப்படையில் வழங்கப்பட்ட மொபைல் இணைப்புகளுக்கு புதிய ஆவணம் கேட்கப்பட மாட்டாது என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மொபைல் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற தகவலுக்கு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.