இலங்கை பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை வழங்கியுள்ளார்.
இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சவை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஈழ தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து கோத்தபயவுடன் அவர் பேசினாரா என்பதை மக்களவையில் விளக்க வேண்டும் என எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் வழங்கியுள்ள கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸில், தேர்தல் பரப்புரையின்போதே உள்நாட்டு போர் குற்றங்களை விசாரிப்பது குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதிக்கப்போவதில்லை என கோத்தபய தெரிவித்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கோத்தபய உடனான சந்திப்பு குறித்து அவையில் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.