கடந்த மாதம் 30ம் தேதியிலிருந்து குஜராத் - மும்பை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தை 52 வினாடிகளில் சென்றடையும். மேலும் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் நவீன ரயில். குஜராத் காந்திநகரிலிருந்து மும்பைக்கு 6 – 7 மணி நேரத்துக்குள் சென்றடையும்.
இந்நிலையில், வந்தே பாரத் , ரயில் துவக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே விபத்தில் சிக்கியுள்ளது. வத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணம் செய்துகொண்டிருந்த போது தண்டவாளத்தில் வழிதவறி வந்த 4 எருமை மாடுகள் மீது மோதியதில் மூன்று மாடுகள் உயிரிழந்தன. மேலும் ரயிலின் இன்ஜினின் முன்புறமும் சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து பேசிய ரயில்வே அதிகாரி, "சில எருமை மாடுகள் தண்டவாத்தில் வந்தன.ஒருவேளை ரயில் ஓட்டுநர் பிரேக் போட்டிருந்தால் பெரிய விபத்து நடந்து , பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும். வேகமாக பயணிக்கும் போது மிருகங்கள் குறுக்கே வந்தவுடனே பிரேக் போட்டால் ரயில் நிலை தடுமாறி உயிர் சேதங்கள் ஏற்படும். . விபத்தின்போது ரயில் சுமார் 140 கிமீ வேகத்தில் வந்துகொண்டிருந்தது. இப்போது ரயில் இருந்த பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ரயிலின் இன்ஜின் மட்டும் சேதமடைந்துள்ளது. இது ஒரு எதிர்ப்பார்க்காத நிகழ்வு. விரைவில் சரிசெய்யப்படும்’’ என்று கூறினார்.