டெல்லியில் இருந்து வாரணாசி வரை செல்லும் வந்தே பாரத் ரயில், இன்று காலை உத்தரப் பிரதேசத்தின் சம்ஹோ ரயில் நிலையம் மற்றும் பரத்னா ரயில் நிலையம் இடையே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ரயில் நடுவழியில் நின்றுவிட்டது. அச்சமயத்தில் ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றும் பிரச்னையை சரிசெய்ய முடியாமல் திணறியுள்ளனர்.
இதையடுத்து சூழலை சரிசெய்ய, சரக்கு ரயிலொன்றின் இன்ஜினை வந்தே பாரத் ரயிலின் முன்பக்கம் கோர்த்துள்ளனர் அதிகாரிகள். தொடர்ந்து சரக்கு ரயிலின் இன்ஜினானது, பரத்னா ரயில் நிலையத்திற்கு வாரணாசி வரையிலான சம்பந்தப்பட்ட அந்த வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்றுள்ளது. அந்த ரயில் நிலையத்தில், சதாப்தி விரைவு ரயில் மற்றும் அயோத்தி வரையிலான மற்றொரு வந்தே பாரத் ரயிலில், பழுதடைந்த வாரணாசி வரையிலான ‘வந்தே பாரத் ரயில்’ பயணிகள் மாற்றிவிடப்பட்டுள்ளனர்.
காலை 9:15 மணியளவில் பழுதடைந்த அந்த வந்தே பாரத் ரயில், பரத்னா ரயில் நிலையத்திலேயே பழுது சரிபார்க்க பல மணி நேரம் நின்றுள்ளது. சுமார் 750 பயணிகள் சம்பந்தப்பட்ட வாரணாசி வந்தே பாரத் ரயிலில் இருந்ததாக மூத்த ரயில்வே அதிகாரி அமித் குமார் சிங் என்பவர் தெரிவித்துள்ளார்.