‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ - வைகோ கடும் எதிர்ப்பு

‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ - வைகோ கடும் எதிர்ப்பு
‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ - வைகோ கடும் எதிர்ப்பு
Published on

‘ஒரே நாடு ஒரே; குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது என வைகோ வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ எனும் திட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்றத் திட்டமிட்டு உள்ளோம் எனவும் அதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் மத்திய உணவு மற்றும் பொது வழங்கல்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார். ஆனால், இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

நேற்று டெல்லியில் நடந்த மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், பேசிய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், இதுவரை 14 மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சேர ஆயத்தமாக உள்ளன எனவும் டிசம்பர் மாதத்தில் அந்த மாநிலங்களில் ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆதார் இணைப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும், அது சரிசெய்யப்பட்டவுடன், ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழ்நாடும் இணைக்கப்பட்டுவிடும் என்றும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழக பொதுப்பகிர்வுத் திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தொழிலாளர்கள் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் பெற்றுக் கொள்ளும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

 அதாவது, ‘பெயர் அளவுக்குக்கூட இந்தத் திட்டத்தை எதிர்க்காமல், ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த, மத்திய பாஜக அரசின் அழுத்தத்திற்குத் தமிழக அரசு அடிபணிந்து இருப்பதையே, அவரது கருத்து எதிரொலிக்கிறது. 

இது தமிழக மக்களுக்கு இழைக்கப்படுகின்ற பச்சைத் துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுப்பகிர்வு முறையைச் சீர்குலைக்கவும், வட இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து வரும் மக்களை ஊக்குவித்து, தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் வலிந்து குடியேற்றுவதற்காகவும்தான், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பொதுப்பகிர்வு முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று, பா.ஜ.க. அரசு ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது. 

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும். எனவே, ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழகத்தை இணைக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com