உத்தரப்பிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர், ரமாகாந்த். இவரது மனைவி, அல்கா தேவி. இவர்களுடைய மகள், உள்ளூர் நபரான அகிலேஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், அகிலேஷ் அந்த மைனர் பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளார். தங்கள் மகள் காணாததைக் கண்டு பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், அகிலேஷ் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண்ணும் மீட்கப்பட்டார். மைனர் பெண்ணைக் கடத்திய வழக்கில் அகிலேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தெரிந்ததும் தன் மகளை, அல்கா தேவி ஃபரூகாபாத் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர்பூர் காஸ் கிராமத்தில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அதேநேரத்தில், தன் மகளின் காதல் விவகாரம் தெரிந்ததும் அவமானத்தில் இருந்த அல்கா தேவி, சொந்த மகளையே கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக 10 ஆண்டுகள் சிறையில் இருந்த சுபாஷ் சிங் (38) என்பவரை அணுகி, ரூ.50 ஆயிரம் பணத்தைக் கொடுத்து மகளைத் தீர்த்துக்கட்டச் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில்தான், உறவினர் வீட்டுக்குச் சென்ற மகள், இந்த சுபாஷையே காதலித்துள்ளார். அவருக்காக, புதிய செல்போன் ஒன்றும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், இந்த விவகாரம் மகளின் தாயான அல்கா தேவிக்குத் தெரியாமலேயே அவரிடம் பணத்தைக் கொடுத்து கொலை செய்யச் சொல்லியுள்ளார்.
ஆனால், சுபாஷ் சிங்கோ தன் காதலியைக் கொலை செய்வதற்குப் பதிலாக அவரது தாயாரையே கொலை செய்துவிட்டார். தம் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பார் என்ற நிலையிலேயே அவரைக் கொலை செய்ததாக சுபாஷ் சிங் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முன்னதாக, அல்கா தேவி கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இதுதொடர்பாக பேரம் பேசுவதற்காக சுபாஷைச் சந்தித்துள்ளார். அப்போதுதான் அவரை, சுபாஷ் கொலை செய்துள்ளார். வீட்டைவிட்டு வெளியில் சென்ற அல்கா தேவி நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது கணவர் அவருடைய செல்போனுக்கு தொடர்புகொண்டுள்ளார். அவர் எடுக்காதாலேயே போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரிலேயே போலீசார் விசாரணை நடத்தியதில் இவ்வளவு பெரிய உண்மை வெளிவந்துள்ளது.