உ.பி.| பள்ளியில் பிரியாணி சாப்பிட்ட 3ஆம் வகுப்பு மாணவர்.. தனியறையில் பூட்டிய தலைமை ஆசிரியர்!
உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர்வில் உள்ள அம்ரோஹாவில் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் அசைவ உணவு (பிரியாணி) சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனித்துள்ளார். இதைப் பார்த்த அவர், அந்த மாணவனை மட்டும் தனி அறையில் அடைத்துள்ளார்.
மேலும், அந்த மாணவனை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாக அவருடைய பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு உடனே பள்ளிக்கு வந்த அந்த மாணவனின் தாயார், பள்ளி முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
அதில், “உங்கள் மகன், தொடர்ந்து அசைவ உணவை கொண்டுவந்து சாப்பிடுவதுடன் மூலம், மற்ற மாணவர்களை மதம் மாற்ற விரும்புகிறார். இந்து கோயில்களை இடிக்க வேண்டும். இப்படிப்பட்ட மாணவனை எங்கள் பள்ளியில் படிக்கவைக்க வேண்டியதில்லை. மாணவனை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டோம்" எனக் கூறுகிறார்.
அதற்கு மாணவனின் தாயார், “கடந்த மூன்று மாதங்களாக வகுப்பில் இந்து - முஸ்லிம் என பிரிவினைப் பார்ப்பதாக என் மகன் கூறுகிறார். இதைத்தான் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறீர்களா? வகுப்பில் உட்கார அனுமதிக்காமல், தனி அறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள். இது அநியாயம். என் மகனுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அவன் வீட்டுக்கு திரும்பியபிறகு எப்படியெல்லாம் தண்டிக்கப்பட்டான் என்பதை எங்களிடம் தெரிவித்தான்" எனக் கூறுகிறார்.
இதையடுத்து பள்ளி முதல்வர், “நீங்கள் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேறவில்லை எனில் போலீஸை அழைப்பேன்” என மிரட்டுகிறார்.
இந்த விஷயம் விவகாரமானதைத் தொடர்ந்து, அம்ரோஹாவின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் சுதிர் குமார், அடிப்படை ஷிக்ஷா அதிகாரி (பிஎஸ்ஏ) மற்றும் பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளர் இந்த விஷயத்தை விசாரிக்க பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்ரோஹா பி.எஸ்.ஏ. மோனிகா, ”இந்த வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர மூன்று பேர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது. விசாரணை முடிந்ததும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்த மாணவன் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து அம்ரோஹா முஸ்லிம் கமிட்டி, நேற்று அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியது. மேலும், பள்ளி முதல்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய கல்வி அமைச்சருக்கு, அந்தக் குழு மனு அனுப்பியுள்ளது.