மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் பிற மாநிலங்களில் காலியாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் இன்று, இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதிகளில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான சமாஜ்வாடிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் கர்ஹால் தொகுதியில் இன்று காலை 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் ஒன்று, சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அந்தப் பெண் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. மேலும் விசாரணையில், “இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உள்ளூர் சமாஜ்வாதி கட்சியினர் மிரட்டியதாலேயே இந்தக் கொலை நடந்துள்ளது’” என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பிரசாந்த் யாதவ் மற்றும் மோகன் கத்தேரியா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், “பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறியதற்காக அப்பெண்ணை குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொன்றுள்ளனர் என பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்" என்று மெயின்புரி மாவட்ட காவல்துறைத் தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கொலையுண்ட பெண்ணின் தந்தை போலீசாரிடம், “மூன்று நாட்களுக்கு முன்பு பிரசாந்த் யாதவ், எங்கள் வீட்டிற்கு வந்து, ‘எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள்’ எனக் கேட்டார். அதற்கு எனது மகள், ’பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் எங்களுக்குக் சொந்த வீடு கிடைத்துள்ளது. இதனால், பாஜகவின் தாமரை சின்னத்திற்குத்தான் வாக்களிப்பேன்’ பதிலளித்தார். இதைக் கேட்ட பிரசாந்த் யாதவ் கும்பல், ‘சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’ என மிரட்டினர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் அந்தப் பெண், கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம், உத்தரப்பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படுகொலைக்கு ஆளும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி, “சமாஜ்வாதி கட்சியின் பிரசாந்த் யாதவ் மற்றும் அவரது உதவியாளர்கள் பட்டியலின பெண் ஒருவரை, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க மறுத்ததால் கொடூரமாக கொலை செய்துள்ளனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் கர்ஹால் வேட்பாளர் தேஜ் பிரதாப் யாதவ், “முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி , "சமாஜ்வாதி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதி இது. இதற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.