உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிபின் ராவத், பிறப்பால் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தேவபிரயாகை என்கிற இடத்தில் புதிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தளபதி ராவத் பெயரை சூட்ட வேண்டும் என தேவப்பிரயாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்டூரி நேற்று (வியாழக்கிழமையன்று) மாநில சட்டசபையில் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரித்து இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழகம் மட்டுமன்றி, உத்தராகண்ட் மாநிலத்தில் தலைநகர் டேராடூன் அருகே ராணுவ தியாகிகளுக்காக கட்டமைக்கப்படும் நினைவிடத்துக்கும் தளபதி பிபின் ராவத் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், உத்தராகண்ட் சட்டசபையில் பிபின் ரவாத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள பிபின் ராவத் இல்லத்திற்கு உத்தராகண்ட் முதல்வர் நேரடியாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த இறுதி அஞ்சலியில், உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து பிபின் ராவத்தின் உறவினர்களும் கலந்து கொண்டார்கள்.
- கணபதி சுப்ரமணியம்
தொடர்புடைய செய்தி: பிபின் ராவத்திற்கு ராணுவ மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு