உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக கிடைமட்டமாக துளையிடும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிடைமட்டமாக தோண்டி கொண்டிருந்த போது, மண்சரிந்ததால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. விடியவிடிய சுரங்கத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.
இது குறித்து தெரிவித்த மீட்புப்படையினர் “இதுவரை 52 மீட்டர் வரை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 முதல் 6 மீட்டர் வரை மட்டுமே தோண்ட வேண்டியுள்ளது. கடைசி குழாயை வெல்டிங் செய்து முடிக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. இனி இந்த கடைசி குழாயை சுரங்கத்திற்குள் அனுப்பும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
எனவே தொழிலாளர்களை இன்று இரவுக்கு மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிடைமட்டமாக சுரங்கம் தோண்டும்போது மண் சரிந்ததால், செங்குத்தாக பள்ளம் தோண்டும் பணியும் நடைபெற்று வருகிறது. அதனால், தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் மீட்புக்குழுவினர் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்.