உத்தரகாண்டில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் பொதுமுடக்கத்தில் குடும்பத்துடன் இணைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்காங்கே வெளியூரில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முற்பட்டு வருகின்றனர். பலர் தங்களது குடும்பத்தினருக்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து ஒன்றாக கூடி வருகின்றனர்.
அந்த வகையில் உத்தரகாண்டில் நபர் ஒருவர் 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பொதுமுடக்கத்தில் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், பகேஷ்வர் மாவட்டம், ரமடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் சிங்க் கார்க்கி. இவர் 24 வருடத்திற்கு பிறகு குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். 1995 ஆம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்த இவர் தனது கிராமத்தை விட்டு வெளியேறினார். பின்னர், அங்கிருந்து டெல்லி சென்று சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.
அவர் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில், “நான் டெல்லியில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்திற்கு சென்றேன். அங்குதான் நான் தோட்ட வேலையை கற்றுக்கொண்டேன். பின்னர் அங்கிருந்து குஜராத் சென்று எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தேன். என் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என நான் முடிவெடுத்தபோது ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஆனால் குடும்பத்தினரை காணும் ஆவலுடன் ஈ.பாஸ்க்கு விண்ணப்பித்தேன். கடவுளின் அருளால் எனக்கு பாஸ் கிடைத்தது. அதனால் 24 ஆண்டுகளுக்கு பிறகு எனது பெற்றோரை பார்க்க சொந்த ஊருக்கு திரும்பினேன்.” எனத் தெரிவித்தார்.
இவரது தாய் பச்சுள்ளி தேவி கூறுகையில், “ எனது மகனை தேடும் பணி முடிவுக்கு வந்துவிட்டது. எனது கணவரும் நானும் என் மகனை தேடாத இடமில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். ஆனால் கடவுள் எங்கள் மகனை திருப்பி கொண்டு வந்து சேர்த்துள்ளார். இனி அவனை நாங்கள் பிரியவே மாட்டோம்” எனத் தெரிவித்தார்.