உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களில் 15 பேர் மீட்கப்பட்டதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் என்ற இடத்தின் அருகே நீர் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் திடீரென பனிப்பாறைகள் வெடித்துச் சிதறி, பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் உள்ள தௌலிகங்கா ஆற்றில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அச்சமயம் நீர் மின் திட்ட கட்டுமானப் பணியில் சுமார் 100 பேர் ஈடுபட்டிருந்தனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் தபோவான் நீர் மின் திட்ட கட்டுமானத்தில் ஒரு பகுதி சேதமடைந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள குகையில் சிக்கிக் கொண்ட 15க்கும் மேற்பட்டோரை இந்திய - திபெத் எல்லை காவல்துறையினர் மீட்டனர். இதனிடையே, தௌலிகங்கா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
சமோலி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டனர். இந்நிலையில் இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.